எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 3 மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தடுப்புசுவரில் மோதல்; ஒருவர் சாவு
துமகூரு அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 3 மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாணவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்
துமகூரு: துமகூரு அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 3 மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாணவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரே மோட்டார் சைக்கிளில்...
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சென்னகரா கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 16). இவர் பள்ளி ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். அதே பள்ளியில் தர்ஷன், சரத் ஆகிய மாணவர்களும் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று எஸ்.எஸ்.எல்.சி.க்கு கணித தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்களான நவீன், தர்ஷன், சரத் ஆகிய 3 பேரும் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டார்கள். ஆனால் தேர்வுக்கு செல்ல தாமதமாகி விட்டதால் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்ல முடிவு செய்தார்கள். அதன்படி, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மாணவர்களும் புறப்பட்டு சென்றனர்.
மாணவர் சாவு
அம்ருத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 3 பேரும் சென்று கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதனால் 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டார்கள். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த நவீன் பரிதாபமாக இறந்து விட்டார். படுகாயம் அடைந்த தர்ஷன், சரத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றதால், அவர்களது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அம்ருத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.