மக்கள் மீது பா.ஜனதா விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளது-குமாரசாமி பேச்சு

மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் மீது பா.ஜனதா விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளதாக கூறி குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்

Update: 2022-04-04 16:18 GMT
பெங்களூரு: மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் மீது பா.ஜனதா விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளதாக கூறி குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மின்சாரம் வினியோகம்

பா.ஜனதாவின் விலைவாசி உயர்வின் கொடூரம் தொடர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அத்துடன் தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாத அரசுக்கு மக்களிடம் பணம் பறிப்பதே தொழிலாகிவிட்டது. கோடை காலத்தில் மின்வெட்டை அமல்படுத்தி மின்சாரத்தை வினியோகம் செய்யாத இந்த அரசு, மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 35 பைசா உயர்த்தியுள்ளது.
தரமான மின்சாரத்தை வழங்க முடியாத அரசு, கட்டணத்தை உயர்த்துவதில் மட்டும் ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறது. 

ஏழை மக்கள் வீடுகளை கட்ட முடியாது. வயிறு நிறைய சாப்பிட முடியாது. ஏழைகள் தற்போது வெளிச்சத்திலும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகளுக்கு எதிராக பா.ஜனதா விலைவாசி உயர்வை போரை தொடங்கியுள்ளது போல் தெரிகிறது.

மக்கள் மீது சுமை

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். மின்வெட்டை அகற்றி மக்களுக்கு தரமான மின்சாரத்தை வழங்க வேண்டும். 

மின் பற்றாக்குறையே இல்லை என்று சொல்லும் அரசு இப்போது அதன் கட்டணத்தை உயர்த்தியது ஏன்?. மக்கள் மீது சுமையை ஏற்படுத்திவிட்டு மின்சாரத்தை திருட்டு வழியில் அரசு மின்சாரத்தை விற்பனை செய்கிறதா?. இல்லை என்றால் மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்