மாதவரத்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த லாரியால் பரபரப்பு

மாதவரத்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த லாரியால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

Update: 2022-04-04 15:46 GMT
சென்னை அடுத்த வல்லூர் அனல் மின் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றது. லாரியை திருவாரூரை சேர்ந்த சிவகுமார் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகே ஜி.என்.டி. சாலையில் வந்தபோது, திடீரென லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காற்று பலமாக வீசியதால் லாரி மள மளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது. 

இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மாதவரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன் தலைமையிலான தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து லாரியில் பிடித்த தீயை தண்ணீரை பீச்சியடித்து அணைத்தனர். இந்த தீவிபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மாதவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்