82 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில் தேர் வெள்ளோட்டம்

உத்திரமேரூர் அடுத்த சீட்டணஞ்சேரியில் உள்ள காளீஸ்வரர் கோவிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர் வெள்ளோட்ட திருவிழாவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-04-04 15:12 GMT
சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் சாமி கோவில்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் சாமி கோவில் தேர் வெள்ளோட்ட திருவிழா நேற்று நடந்தது.

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தேர் பணி முடிந்து வீதி உலா

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கோவில்களில் பழுதுகளால் ஓடாமல் இருந்த தேர்களையும், புதிய தேர்களையும், தெப்பக்குளங்களையும், நந்தவனங்களையும், அந்தந்த தலவிருட்ச மரங்களையும் அடையாளம் கண்டு அந்த பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று கடந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கியிருந்தார். தற்போது உள்ள பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து 1,000 ஆண்டுகள் மேற்பட்ட பழைமையான கோவில்களுக்கு திருப்பணிகள் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இந்த காளீஸ்வரர் கோவிலும் 1,000 ஆண்டுகள் மேற்பட்ட கோவில் என்று கூறுகிறார்கள். இந்த தேர் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பில் 82 ஆண்டுகளுக்கு பிறகு தேர் பணிகள் முடிவுற்று வீதிஉலா வருகிறது.

கோவில்களில் நிதி வசதி இருப்பின் அதை ஏற்படுத்தி திருப்பணிகளை செய்து தரவும், நிதி பற்றாக்குறை இருப்பின் அரசு சார்பிலும் நிதி உதவி தர தயாராக உள்ளோம். நிலுவையில் இருந்த திருப்பணிகள் முடிவுற்று, கும்பாபிஷேகம் 100-ஐ தாண்டியிருக்கிறது.

அறங்காவலர்கள் நியமனம்

தனியார் கோவில்களிலும் 50-க்கும் மேற்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 1,200 கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 1,000 கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். ஒரு கால பூஜைக்கு கூட போதிய நிதி வசதி இல்லாத கோவில்களில் நிதி ஆதாரத்தை ஏற்படுத்த அருகில் உள்ள அதிக வருவாய் உள்ள கோவில்களுடன் இணைக்கின்ற பணியும் நடந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை அனைத்து பிரிவிலும் கடந்த ஆண்டு இல்லாத அளவிற்கு குறைகளை பதிவிடுக என்ற செயலியை உருவாக்கி உள்ளோம். அவர்களின் குறைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை தீர்த்துவைக்கும் பணியில் இத்துறை ஈடுபட்டு வருகிறது. நன்கொடையாளர்களையும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களையும் இணைத்து அறங்காவலர்களை நியமிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்