தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை: ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைபொருட்களை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ரவுடிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகள், நிறைவேற்றப்பட வேண்டிய பிடியாணைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஐ.ஜி. பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணே்ஷ் (தூத்துக்குடி நகரம்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சங்கர் (மணியாச்சி), உதயசூரியன் (கோவில்பட்டி), பிரகாஷ் (விளாத்திகுளம்), ராஜூ (சாத்தான்குளம்), நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மதுவிலக்கு பாலாஜி, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு பிரேமானந்தன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், ஆயுதப்படை கண்ணபிரான், மாவட்ட குற்ற ஆவண பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டின் வினு, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.