மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவர் கைது

வடமதுரை அருகே மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-04 14:46 GMT
வடமதுரை:
வடமதுரை ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (வயது 38). இவருக்கும், வேடசந்தூர் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த பூபதிராஜா (41) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் உமாமகேஸ்வரி, பூபதிராஜாவை விட்டு பிரிந்து, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மேலும் பூபதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உமாமகேஸ்வரி வேடசந்தூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், உமாமகேஸ்வரிக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சமும், இழப்பீட்டு தொகையாக ரூ.25 லட்சமும் வழங்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டனர். ஆனால் பூபதிராஜா ஜீவனாம்சம் மற்றும் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து உமாமகேஸ்வரி மீண்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூபதிராஜா மீது பெண்கள் குடும்ப வன்முறை சட்டம் 2005-ன்படி கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து பூபதிராஜாவை கைது செய்தார்.

மேலும் செய்திகள்