குளிக்க சென்றபோது புழல் ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
புழல் ஏரியில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
ஏரியில் மூழ்கினர்
செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் பகுதியில் நேற்று கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். இந்த நிலையில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களில் 5-க்கும் மேற்பட்டோர் நேற்று வெயில் காரணமாக பம்மதுகுளம் அருகே உள்ள புழல் ஏரிக்கு குளிக்க சென்றனர். இதையடுத்து, ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீச்சல் தெரியாமல் 2 பேரும் ஏரியில் மூழ்கினர். இதைக்கண்டு உடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
2 பேர் பலி
ஆனால் அதற்குள் இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து செங்குன்றம் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கி பலியானவர்களின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். விசாரணையில் நீரில் மூழ்கி இறந்தது, சென்னை அடுத்த புழல் என்.எஸ்.கே.தெருவைச் சேர்ந்த விஜயராஜ் (வயது 22) மற்றும் சாம் (20) என்பது தெரியவந்தது. இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.