சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் இ்ந்திய வர்த்தக குழுமத்தினர் மனு அளித்தனர்.

Update: 2022-04-04 14:32 GMT
வெளிப்பாளையம்: 
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் இ்ந்திய வர்த்தக குழுமத்தினர் மனு அளித்தனர். 
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய வர்த்தக குழும தலைவர் சலீம், துணைத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நாகையில் உள்ள அனைத்து சேவை சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். 
அதில், நாகை தனியார் கல்லூரியில் படித்த மாணவி சுபாஷினி கடந்த 30-ந்தேதி நாகூரில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சில அராஜக கும்பல்கள் இதை திசை திருப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுகிறது. இந்த சம்பவத்தை திசை திருப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை தன்மை அறிந்து உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும். 
கடையடைப்பு போராட்டம்
அராஜக கும்பல் மிரட்டும் நிலை நீடித்தால் நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவது கடினம் என வலியுறுத்தி இந்திய வர்த்தக தொழிற் குழுமம் மற்றும் சேவை சங்கம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். அதேபோல் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். அது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இல்லையெனில் மாவட்டம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
அதிகாரி மீது நடவடிக்கை
வேதாரண்யம் அருகே குரவப்புலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், நாகை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தங்கள் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்