தூத்துக்குடியில் கோழிக்கடை தொழிலாளி கொலை

தூத்துக்குடியில் கோழிக்கடை தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-04-04 14:30 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கோழிக்கடை தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பெரியசாமி (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோழிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பெரியசாமி, அவரது நண்பர் ஜெயபால் என்பவருடன் டி.சவேரியார்புரம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபருக்கும், பெரியசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியசாமி அந்த வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த வாலிபர் தனது உறவினருடன் வந்து பெரியசாமியிடம் தகராறு செய்தாராம். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெரியசாமி கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது.
கொலை
இதன்பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் வாலிபர்கள் தாக்கியதால், பெரியசாமி இறந்து இருப்பதாகவும், கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார், பெரியசாமியை தாக்கியதாக தூத்துக்குடியை சேர்ந்த சச்சின் (26), வினோத் (24) ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்