வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்;
ஊட்டி
நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திர அமுத பெருவிழா மற்றும் பல்வேறு துறை பணி விளக்க கண்காட்சி, ஊட்டி என்.சி.எம்.எஸ். மைதானத்தில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அறிவிப்புகள், சுதந்திர போராட்ட தலைவர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றது. இந்தநிலையில் நிறைவு நாள் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது, பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் சுதந்திர போராட்ட தலைவர்கள், தியாகிகளின் வரலாறு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நடத்தப்பட்ட மாரத்தான், கட்டுரை, பேச்சு, ஓவியம் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சரண் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.