தேனி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு மகனுக்கு மொட்டைபோட்டு திரும்பியபோது பரிதாபம்
தேனி அருகே மகனுக்கு கோவிலில் மொட்டைபோட்டு விட்டு மோட்டார்சைக்கிளில் கணவருடன் வந்த பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தேனி:
தேனி பாரஸ்ட்ரோடு 11-வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 29). இவர் தேனியில் உள்ள ஒரு தராசுக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா (28). இவர்களுக்கு சூர்யா (4), கார்த்திக் என 2 மகன்கள் உள்ளனர். 1½ வயதான கார்த்திக்கிற்கு முடிக்காணிக்கை செலுத்த காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தினேஷ்குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்றார். அங்கு குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தினேஷ்குமார், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் நேற்று திரும்பி வந்து கொண்டு இருந்தார். கொடுவிலார்பட்டி-நாகலாபுரம் சாலையில் பாலகிருஷ்ணாபுரம் பிரிவு அருகில் வந்தபோது, சாலையில் இருந்த மேடு, பள்ளத்தில் மோட்டார் சைக்கிளை ஏற்றி இறக்கினார். அப்போது பின்னால் அமர்ந்து இருந்த பிரியா நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அந்த வழியாக வந்தவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.