ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்க இருந்த நிலையில் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க இருந்த நிலையில் முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-04-04 14:00 GMT
படம்
மும்பை, 
ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க இருந்த நிலையில் முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. காவல்
மாநில முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் அனில்தேஷ்முக்கின் நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே, தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே ஆகியோரும் கைதாகி ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அளித்த ரூ.100 கோடி ஊழல் புகார் குறித்து அனில்தேஷ்முக், குந்தன் ஷிண்டே, சஞ்சீவ் பாலன்டே மற்றும் அண்டிலா வெடிகுண்டு கார் வழக்கில் கைதாகி தலோஜா ஜெயிலில் உள்ள முக்கிய குற்றவாளி முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து இருந்தது. இவர்கள் அனைவரையும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளும் அனுமதி வழங்கி இருந்தது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்தநிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அனில்தேஷ்முக், அவரது உதவியாளர்கள் மற்றும் சச்சின் வாசேவை காவலில் எடுத்து விசாரிக்க இருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் 2 குழுவாக ஆர்தர் ரோடு, தலோஜா ஜெயிலுக்கு சென்றனர். அப்போது தான் அனில்தேஷ்முக் தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஜே..ஜே. ஆஸ்பத்திரி டீன் பல்லவி சாப்லே கூறுகையில், "மாநில முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ஆஸ்பத்திரி எலும்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை மாலையில் தான் அளிக்க முடியும்" என்றார்.

----

மேலும் செய்திகள்