மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனர்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனர்.
தேனி:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தேனி பழைய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டர்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு எதிராகவும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அப்போது, ஐ.என்.டி.யூ.சி. மத்திய சங்க மண்டல பொதுச்செயலாளர் அனந்தநாராயணன் அரைநிர்வாண கோலத்தில் மாலை அணிந்து சிலிண்டர் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்தார். அவரோடு இணைந்து நிர்வாகிகள் சிலரும் ஒப்பாரி வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் நகர தலைவர் முனியாண்டி, வட்டார தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.