தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன்-பணம் பறித்த 2 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன்-பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-03 22:20 GMT
கொள்ளிடம் டோல்கேட்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நந்திகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமியின் மகன் சேகர்(வயது 33). இவர் திருச்சியில் உள்ள தனியார் கார் பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகர், அந்த நிறுவனத்தில் பழுது நீக்கப்பட்ட கார் ஒன்றை சோதனை ஓட்டத்திற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி வந்தார். நெ.1 டோல்கேட்டை அடுத்த கூத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் காரை நிறுத்திவிட்டு அவர் நின்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சேகரை மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், 2 பேரும் சேகரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சேகர் உடனடியாக கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் பகுதியை சேர்ந்த பாலுமகேந்திரன்(36), வாழக்கட்டை பகுதியை சேர்ந்த குட்டி என்ற பிரவீன்குமார்(32) என்பதும், சேகரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இது குறித்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததுடன், 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாலுமகேந்திரன் மீது வாத்தலை, ஸ்ரீரங்கம் மற்றும் கொள்ளிடம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்