டயர் கடையில் தீ விபத்து

டயர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-04-03 22:19 GMT
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தாளக்குடியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). இவர் டி.வி.எஸ். டோல்கேட் ஹனீபா காலனியில் டயர் ரீ டிரேடிங் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவரது கடையில் தீப்பிடித்து அங்கிருந்த டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் மள, மளவென எரிய தொடங்கின. கடைக்குள் இருந்து புகை வெளியேறியதால் உடனடியாக அந்த பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் கடைக்குள் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதையடுத்து கடையில் எரிந்த தீ முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.

மேலும் செய்திகள்