வரதட்சணை கொடுமை: விஷம் கொடுத்து பெண் கொலை - கணவர் உள்பட 3 பேர் கைது

மூடிகெரே அருகே வரதட்சணை கொடுமைப்படுத்தி விஷம் கொடுத்து பெண்ணை கொன்ற கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-04-03 21:02 GMT
சிக்கமகளூரு:

வரதட்சணை கொடுமை

  சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா காரேபைலு கிராமத்தை சேர்ந்தவர் நந்தீப் (வயது 30). இவருக்கும், என்.ஆர்.புரா தாலுகா பன்னூர் கிராமத்தை சேர்ந்த கானவி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு(2021) திருமணம் நடந்தது. அப்போது கானவியின் பெற்றோர் வரதட்சணையாக நகை,ெராக்கம் கொடுத்து இருந்தனர். அதன்படி திருமணம் முடிந்த புதிதில் தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

  ஆனால் கடந்த சில மாதங்களாக கானவியிடம், கணவர் நந்தீப் கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு செய்து உள்ளார். இதனால் கானவி பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் ரூ.2 லட்சத்தை கொடுத்து கானவியை, கணவருடன் சேர்ந்து வாழும்படி அனுப்பி வைத்தனர். ஆனாலும் நந்தீப் மேலும் வரதட்சணை கேட்டு கானவியை கொடுமைப்படுத்தி உள்ளார். இதற்கு நந்தீப்பின் பெற்றோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

விஷம் கொடுத்து கொலை

  இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நந்தீப், அவரது பெற்றோர் வரதட்சணை வாங்கி வரும்படி கானவியிடம் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு கானவி மறுத்துள்ளார். இதனால் அவர்கள், கானவியிடம் தகராறு செய்துள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தை அவர்கள் கானவியின் கை, கால்களை பிடித்து விஷம் மருந்தை வாயில் ஊற்றி குடிக்க வைத்துள்ளனர்.

  இதனால் கானவி உடல்நலம் பாதித்ததாக தெரிகிறது. ஆனால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். உடல் நிலை மிகவும் மோசமான பிறகு கானவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அப்போது அவர்கள், டாக்டர்களிடம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையின்போது கானவி விஷம் குடித்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து கானவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி கானவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் உள்பட 3 பேர் கைது

  இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர், மகள் கானவியை அவளது கணவர் நந்தீப், மாமனார்-மாமியார் வரதட்சணை கொடுமைப்படுத்தி விஷம் குடிக்க வைத்து கொலை செய்ததாக மூடிகெரே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நந்தீப், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

  அதில் கானவியை, அவர்கள் விஷம் குடிக்க வைத்து கொன்றது உறுதியானது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்கள் மீது மூடிகெரே போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்