ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேருவேன்; மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவிப்பு
ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேருவதாக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவித்துள்ளார்.
தார்வார்:
பா.ஜனதாவில் சேர்க்கக்கூடாது
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பசவராஜ் ஹொரட்டி. அவர் நீண்ட காலமாக ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் மேல்-சபை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பசவராஜ் ஹொரட்டியின் எம்.எல்.சி. பதவி காலம் வருகிற ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.
இதையடுத்து ஆசிரியர் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, பசவராஜ் ஹொரட்டி பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவல் குறித்து அவர் எந்த கருத்தையும் கூறாமல் மவுனம் காத்து வந்தார். இதற்கிடையே, பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதாவில் சேர்க்கக்கூடாது என்று அக்கட்சியின் உப்பள்ளி-தார்வார் பகுதி நிர்வாகிகள் பகிரங்கமாக வலியுறுத்தி வந்தனர்.
அழைப்பு விடுத்தனர்
இந்த நிலையில் பசவராஜ் ஹொரட்டி, தான் பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவில் சேருமாறு அக்கட்சி தலைவர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் வருகிற மேல்-சபை தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடுமாறும் கூறியுள்ளனர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் என்னிடம் பேசி கட்சிக்கு வருமாறு கூறினர். அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி நான் பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளேன்.
கவலைப்பட மாட்டேன்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நான் பா.ஜனதாவில் சேருவேன். அதற்கான தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும். நான் பா.ஜனதாவில் சேருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுபற்றி நான் கவலைப்பட மாட்டேன். அது எனக்கு தேவை இல்லாத விஷயம். நான் பா.ஜனதாவில் சேருவதற்கு குமாரசாமியும் திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி கூறினார்.