டாஸ்மாக் மதுபான பாருக்கு சீல் வைப்பு

அனுமதியின்றி இயங்கி டாஸ்மாக் மது பாருக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-04-03 20:52 GMT
தாரமங்கலம்:-
தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி சில இடங்களில் அரசின் அனுமதி பெறாமல் பார்களை நடத்தி வருவதாகவும், கடையின் விற்பனை நேரத்திற்கு முன்பாக காலை 6 மணி முதல் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக வைத்து விற்பனை செய்து வருவதாகவும் டாஸ்மாக் மாவட்ட மேலாளார் ராஜாவுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில், மேற்கு மண்டல கலால் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் கிடங்கு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று தாரமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாப்பம்பாடி கிராமம் கசப்பேரி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் பார் உரிய அனுமதியின்றியும், கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாக காலை 6 மணிமுதல் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன்பிறகு ஆரூர்பட்டி 4 ரோடு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மதுப்பிரியர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆய்வு செய்ய விடாமல் தடுத்தனர். அதன்பிறகு பார் நடத்த உரிய அனுமதி பெற்ற ஆவணங்களை பார் உரிமையாளர் தரப்பில் காண்பித்த பிறகு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த ஆய்வின் போது, தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக உடன் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்