ஏற்காட்டில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
ஏற்காட்டில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.;
ஏற்காடு:-
ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் சாராயம் விற்பனையை முற்றிலும் தடுக்க ஏற்காடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில், ஏற்காட்டில் இருளங்காடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக நேற்று முன்தினம் சேலம் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு தையல் நாயகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 1,000 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
போலீஸ் விசாரணையில், ஏற்காடு முருகன் நகரை சேர்ந்த முஸ்தபா என்பவர் சாராய ஊறலை போட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக சாராயம் ஊறல் ஏற்படுத்திய முஸ்தபா (வயது 55), அவருடைய மனைவி மும்தாஜ் (40) மற்றும் அதே பகுதியை சேர்ந்த காளியம்மாள் (45) ஆகிய 3 பேரை ஏற்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.