கேர்மாளம் அருகே பஸ் வசதி இல்லாததால் 7 கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்கூடம் செல்லும் மலைக்கிராம மாணவ-மாணவிகள்

கேர்மாளம் அருகே பஸ் வசதி இல்லாததால் மலைக்கிராம மாணவ-மாணவிகள் 7 கி.மீ. தூரம் பள்ளிக்கூடத்துக்கு நடந்தே சென்று வருகிறார்கள்.

Update: 2022-04-03 20:43 GMT
தாளவாடி
கேர்மாளம் அருகே பஸ் வசதி இல்லாததால் மலைக்கிராம மாணவ-மாணவிகள் 7 கி.மீ. தூரம் பள்ளிக்கூடத்துக்கு நடந்தே சென்று வருகிறார்கள்.
பஸ் இயக்கப்படவில்லை
தாளவாடி ஒன்றியம் திங்களூர் ஊராட்சியில் கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் காடட்டி, காடுபசுவன்மாளம், நீர்குண்டி, சுஜ்ஜல்கரை போன்ற மலைக்கிராமங்களில் இருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஊர்கள் கோட்டமாளத்தில் இருந்து சுமார் 3 மற்றும் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கிருந்து பள்ளிக்கூடத்துக்கு பஸ் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் சுமார் 7 முதல் 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். வனப்பகுதி வழியாக மாணவ-மாணவிகள் நடந்து செல்லும்போது வனவிலங்குகள் அவர்களை தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மலைப்பகுதி மாணவ-மாணவிகளின் கல்வியும் தடைப்படுகிறது.
கோரிக்கை
இதுகுறித்து மாணவ-மாணவிகள் மற்றும் மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘மாணவ-மாணவிகளின் வசதிக்காக தாளவாடியில் இருந்து கோட்டமாளத்துக்கு பள்ளிக்கூட நேரத்துக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு் வந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டு இருந்ததால் பஸ்சில் மாணவ-மாணவிகளின் கூட்டம் குறைந்தது. இதனால் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளிக்கூடம் திறந்து சில மாதங்கள் ஆகியும் மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பஸ் இயக்கப்பட்டால் கேர்மாளம் மற்றும் திங்களூர் ஊராட்சிகளை சேர்ந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் மலைப்பகுதி மக்கள் பெரும் பயனடைவார்கள்’ என்றனர்.

மேலும் செய்திகள்