ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 44 காசுக்கு விற்பனை- டீசல் விலையும் உயர்ந்தது
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 44 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல் டீசல் விலையும் அதிகரித்துள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 44 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல் டீசல் விலையும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து விலை உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. மேலும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததன் காரணமாகவும் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் -டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடும் பாதிப்பு
ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய் 69 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் 98 ரூபாய் 78 காசுக்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்றும் பெட்ரோல் -டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் விலை உயர்ந்து 109 ரூபாய் 44 காசுக்கும், டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 99 ரூபாய் 54 காசுக்கும் விற்பனை ஆனது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் இதன் எதிரொலியாக மற்ற பொருளின் விலையும் தற்போது உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டீசல் -பெட்ரோல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.