காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை
குண்டலுபேட்டை அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தம்பியின் காதலியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
கொள்ளேகால்:
காதல் விவகாரம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுன் ஒசூர் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சிக்கராஜூ(வயது 30). இவரது தம்பி வினோத்துக்கு அதே பகுதியை சேர்ந்த சோனாக்ஷி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சோனாக்ஷியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இருகுடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையும் காதல் விவகாரத்தில் சோனாக்ஷியின் தந்தை மகாதேவய்யா, அவரது மகன்கள் கிரண், அபிஷேக் ஆகியோரும், வினோத்தும் அவரது அண்ணன் சிக்கராஜூவுக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
வாலிபர் குத்திக்கொலை
இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த மகாதேவய்யா, அவரது மகன்கள் சேர்ந்து வினோத்தின் அண்ணனான சிக்கராஜூவை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிக்கராஜூ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைததனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிக்கராஜூ பரிதாபமாக உயரிழிந்தார்.
வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குண்டலுபேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் தந்தை மகாதேவய்யா, அவரது மகன்களான கிரண், அபிஷேக் ஆகிய 3 பேரும் சேர்ந்து வினோத்தின் அண்ணன் சிக்கராஜூவை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே தந்தை-மகன்கள் 3 பேரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து குண்டலுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.