பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு; பெங்களூரு நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர்

நேபாள பெண் கற்பழிப்பு வழக்கில் பிடிக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர் பெங்களூரு நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர் ஆவார்.

Update: 2022-04-03 20:25 GMT
பெங்களூரு:

நேபாள பெண் கற்பழிப்பு

  பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேபாள நாட்டை சேர்ந்த ஒரு பெண் வசித்து வருகிறார். கடந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி, அந்த பெண்ணின் வீட்டுக்குள் பிரபல ரவுடியான முகமது அவேஜ் புகுந்தார். பின்னர் அந்த பெண்ணை கற்பழித்துவிட்டு அவா் ஓடினார். அந்த பெண் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து ரவுடி முகமது அவேஜை பிடித்து டி.ஜே.ஹள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் மீது 26 வழக்குகள் இருப்பதும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் பெங்களூருவுக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. தடையை மீறி பெங்களூரு நகரில் உள்ள நேபாள வீட்டு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை கற்பழித்ததும் தெரிந்தது.

ரவுடி தப்பி ஓட்டம்

  இதையடுத்து, அன்றைய தினம் இரவு முகமது அவேஜை மருத்துவ பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றிருந்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு முகமது அவேஜ் தப்பி ஓடி இருந்தார். தப்பி ஓடிய அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

  இந்த நிலையில், நேற்று முன்தினம் டி.ஜே.ஹள்ளி அருகே முகமது அவேஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள கட்டிடத்தின் அருகே வைத்து ரவுடி முகமது அவேஜை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அவரை சரண் அடையும்படி போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

  ஆனால் அவர் சரண் அடைய மறுத்து விட்டார். இதனால் அவரை பிடிக்க போலீசாா் சென்றனர். அப்போது தன்னிடம் இருந்த ஆயுதத்தால் போலீஸ்காரர் ஒருவரை தாக்கிவிட்டு தப்பி ஓடுவதற்கு முகமது அவேஜ் முயன்றார். உடனே அவரை நோக்கி போலீசார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது.

  உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தார்கள். கைதான ரவுடி முகமது அவேஜ் மற்றும் காயம் அடைந்த போலீஸ்காரர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதான முகமது அவேஜ் மீது டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்