பப்ஜி விளையாடுவதற்காக ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்
பப்ஜி விளையாடுவதற்காக ரெயில் நிலையத்துக்கு சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளான்.
பெங்களூரு:
பெங்களூரு எலகங்காவில் உள்ள ரெயில் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. அப்போது அந்த அழைப்பை எடுத்து ஊழியர் பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், எலகங்காவுக்கு வரும் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான். இதையடுத்து, ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள், ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் சோதனையின் போது ரெயில் நிலையத்திலும், அங்கு வந்த ரெயில்களிலும் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 12 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அந்த சிறுவன், எலகங்கா அருகே வினாயகாநகரில் பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன் பப்ஜி விளையாடி வந்துள்ளான். அவனுடன் சேர்ந்து மற்றொரு சிறுவனும் விளையாடி வந்துள்ளான். மற்றொரு சிறுவன் எலகங்காவில் இருந்து ரெயில் மூலம் வெளியூர் செல்ல இருந்துள்ளான். அவன் வெளியூருக்கு சென்று விட்டால் தன்னுடன் சேர்ந்து பப்ஜி விளையாட முடியாது என்பதால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் எலகங்கா ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.