வீடு புகுந்து வாலிபர் கொலை
பெலகாவி அருகே வீடு புகுந்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
பெலகாவி:
பெலகாவி தாலுகா ரானுகுண்டே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ் பட்டீல்(வயது 30). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்தார். அப்போது நாகேசின் வீட்டிற்குள் புகுந்த சிலர் நாகேசை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த நாகேஷ் பரிதாபமாக இறந்தார். நாகேஷ் இறந்ததை உறுதி செய்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் பெலகாவி புறநகர் போலீசார் அங்கு சென்று நாகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நாகேசை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.