நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
கடையநல்லூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றித்திரிவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையநல்லூர் ரேஞ்சர் த.சுரேஷ் தலைமையில், வனவர் முருகேசன், வனக்காப்பாளர்கள் பொன்பாண்டியன், மாதவன், வனக்காவலர் ஆனந்த் ஆகியோர் சொக்கம்பட்டி பீட் சேம்பூத்து பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு கையில் நாட்டுத்துப்பாக்கி, நெற்றியில் லைட்டுடன் சுற்றித்திரிந்த தென்காசி வாலிபபொத்தையை சேர்ந்த முகம்மது ஹனிபா மகன் நவாஸ்கான் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
மேலும் நாட்டு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.