ரேஷன் அரிசி கடத்தல் கும்பலால் வெட்டப்பட்ட டிரைவர் சாவு

களியக்காவிளை அருகே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலால் வெட்டப்பட்ட டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-04-03 18:59 GMT
களியக்காவிளை, 

களியக்காவிளை அருகே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலால் வெட்டப்பட்ட டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுதங்களால் தாக்குதல்

களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பொன்னப்பநகர் பாறையடிவிளையை சேர்ந்தவர் ஷிஜி (வயது 41), ஆட்டோ டிரைவர். திருமணம் ஆகவில்லை. இவரும் எஸ்.டி.மங்காடு அருகே பணமுகம் பகுதியை சேர்ந்த அஜின் (26) என்பவரும் கடந்த 26-ந் தேதி இரவு குளப்புறம் அன்னிகரை பகுதி சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். 
அப்போது கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று அவர்களை நோக்கி வேகமாக வந்து நின்றது. காரில் இருந்து ஒரு கும்பல் கையில் வெட்டுக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்  திபு...திபு...வென இறங்கியது. தொடர்ந்து அந்த கும்பல் சாலையில் நின்ற ஷிஜி, அஜின் ஆகியோரை ஆயுதங்களால் சரமாரியாக  வெட்டினர். இந்த தாக்குதலில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். ஷிஜியின் தலை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். 

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல், பொதுமக்களிடம் சிக்கி விடுவோமோ என பயந்து காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது.

பின்னர் இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 

இதற்கிடையே கும்பல் விட்டுச் சென்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூடைகளில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தல் பற்றி அஜினும், ஷிஜியும் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அந்த கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

சிகிச்சை பலனின்றி சாவு

இதுதொடர்பாக மெதுகும்மல் மேற்குவிளையை சேர்ந்த ஜோஸ் (22), காப்புக்காடு மாராயபுரம் பாறவிளையை சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் சிலர் மீது களியக்காவிளை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிஜி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்