சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
சிவகங்கை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 60 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 60 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
சிவகங்கை அருகே உள்ள தமறாக்கி தெற்கு கிராமத்தில் உள்ள கலியுக வரத அய்யனார், மந்தை கருப்பண சாமி, ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக் கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 800- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று சீறி பாய்ந்த காளைகளை அடக்கினர். வாடி வாசலை விட்டு வெளியே வந்த பல காளைகள் வரும்போதே ஆக்ரோஷமாக பாய்ந்து வந்ததால் மாடுகளை பார்த்து மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர்.
பரபரப்பு
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட வெள்ளை காளை ஒன்று வாடிவாசலை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் ஓடியது. பின்னர் அந்த காளை திரும்பவும் வாடிவாசல் பகுதிக்கு வந்தது. இவ்வாறு பல தடவை அந்த காளை திரும்ப, திரும்ப வந்தது. அப்போது அங்கிருந்த மாடுபிடி வீரர் ஒருவர் கையில் குத்தி காயம் ஏற்படுத்தியது.
அந்த காளை பின்னர் வாடி வாசல் வழியாக அடுத்தடுத்து வந்த காளைகளுடன் சேர்ந்து மீண்டும் வாடிவாசல் பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
பரிசு
வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கிராமம் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் சொந்த கிராமம் என்பதால் அவர் சார்பில் வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 60-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த 29 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பபட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் குறைந்த எடை கொண்ட குட்டை ரக காளை, வீரர்களை சிதறடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.