அரூர் கடைவீதியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

அரூர் கடைவீதியில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ரூ.2 லட்சம் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-03 18:42 GMT
அரூர் :
அரூர் கடைவீதியில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ரூ.2 லட்சம் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைக்கடையில் திருட்டு
தர்மபுரி மாவட்டம் அரூர் பாட்சாப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஞானவேல். இவர் அரூர் கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை 4 மணிக்கு சுப்பிரமணி டீ குடிப்பதற்காக கடைவீதிக்கு வந்தார்.
அப்போது நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து மகனுக்கு தகவல் தெரிவித்தார்.  இதையடுத்து ஞானவேல் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த 2½ கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும்  தங்க நகை வைத்திருந்த லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இதுகுறித்து ஞானவேல் அரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர் கடப்பாரையால் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து வெள்ளிப்பொருட்களை திருடி சென்றதும், லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ½ கிலோ தங்க நகை, 4 கிலோ வெள்ளி தப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கடை மற்றும் வெளியே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் அருகில் உள்ள மேலும் 2 நகைக்கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. திருட்டு போன வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பரபரப்பு
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நகைக்கடையில் திருட்டு நடந்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்