‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்;

Update: 2022-04-03 18:42 GMT
கற்கள் அப்புறப்படுத்தப்படுமா? 
அந்தியூரில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் பொரிக்கடை பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த பாலம் சீரமைக்கப்பட்டது. இதற்காக பாலத்தில் இருந்து அகற்றப்பட்ட கற்கள் ரோட்டில் போடப்பட்டது. ஆனால் அந்த கற்கள் அகற்றப்படவில்லை. இதனால் ரோட்டில் கற்கள் குவிந்து கிடப்பதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு் செல்கிறார்கள். விபத்துகள் ஏற்பட்டு் வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டில் போடப்பட்டுள்ள கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், அந்தியூர்.

மின்விளக்கு ஒளிரவில்லை
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் ஆஞ்சநேயர் கோவில் முன்பு காந்தி சிலை உள்ளது. இதன் அருகே பொருத்தப்பட்ட மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக ஒளிரவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். உடனே மின்விளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.

வாகன ஓட்டிகள் அவதி
பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பாலத்தில் இருந்து அக்ரஹாரம் செல்லும் சர்வீஸ் ரோடு மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். தட்டு தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
பொதுமக்கள், லட்சுமி நகர்.

ரோடு சீரமைக்கப்படுமா?
பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியவிளாமலை கிராமத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு குழாய் பதிக்க ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாய் பதித்த பிறகு ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால் சுவாச பிரச்சினை போன்ற நோய்கள் ஏற்படுகிறது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், பெரியவிளாமலை.

ஆகாயத்தாமரைகளை அகற்ற...
ஈரோடு வில்லரசம்பட்டி அருகில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாராயணன், ஈரோடு.

குண்டும்-குழியுமான சாலை 
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து கனிராவுத்தர் குளம் செல்லும் வழியில் உள்ள ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அந்த இடத்தில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பலர் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தர், ஈரோடு.

மேலும் செய்திகள்