அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா; அதிகாலையில் நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவை அதிகாலை 5 மணிக்கு நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-04-03 18:39 GMT
அந்தியூர்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவை அதிகாலை 5 மணிக்கு நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
குண்டம் விழா
அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. 
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. 
அதிகாலை 5 மணி அளவில்...
இந்த நிைலயில் குண்டம் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். 
அப்போது அவர் பேசுகையில், ‘இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பகல் 11 மணிக்கு மேல் குண்டம் விழாவையொட்டி பக்தர்கள் தீ மிதிப்பது வழக்கம். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் காரணமாக பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி அதிகாலை 5 மணி அளவில் நடத்தப்படவேண்டும்.
நீர்மோர்
இதையொட்டி குண்டம் இறங்கும் பக்தர்களை வரிசைப்படுத்துதல், பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சிலம்பூர் அம்மன் அழைத்தல், வாக்கு கேக்குதல் நடைபெற்றவுடன் குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் வரிசையாக அனுமதிக்கப்படுவார்கள்,’ என்றார். 
கூட்டத்தில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்,  இந்து சமய அறநிலையத்துறை செயல் அதிகாரி சரவணன் மற்றும் போக்குவரத்து போலீசார், வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்