50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலம்பம் சுற்றியபடி மாணவ-மாணவிகளின் நடைபயணம்
50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலம்பம் சுற்றியபடி மாணவ-மாணவிகளின் நடைபயணம் நடந்தது
சிவகங்கை, ஏப்.4 -
உலக சாதனைக்காக மாணவ-மாணவிகள் சாலையில் சிலம்பம் சுற்றி 50 கி.மீ. தூரம் செல்லும் நடை பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இடஒதுக்கீடு
அரசு வேலைவாய்ப்பில் சிலம்ப வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் வீர விதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை சிவகங்கை அடுத்த ஒக்கூரில் உள்ள நேரு இளைஞர் மையம் சார்பில் உலக சாதனை முயற்சிக்காக ஒக்கூரில் இருந்து மானாமதுரை வரை 50 கிலோமீட்டர் தொலைவிற்கு சிலம்பம் சுற்றி கொண்டே நடைபயணமாக செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் மானாமதுரையில் பரிசளிப்பு விழா நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து ஒக்கூரில் இருந்து சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவிகள் 140 பேர் சிலம்பத்தினை சுற்றிக்கொண்டே வந்தனர். அவர்களுடன் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் உடன் சென்றனர்.
ஒக்கூரில் இருந்து அவர்கள் சிவகங்கை வரை நடந்து வந்தனர். இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தெரிந்தது. மாணவ- மாணவிகள் இதுபோல் ரோட்டில் சிலம்பத்தை சுற்றிக்கொண்டே வருவது பாதுகாப்பு இல்லாதது என்பதனால் அனுமதி மறுத்து உடனடியாக அவர் நடைபயணத்தை நிறுத்தி வாகனங்களில் செல்லும் படி தெரிவித்தார்.
பாதுகாப்பு
இதற்கிடையில் மாணவ-மாணவிகளின் நடைபயணம் சிவகங்கையை கடந்து மானாமதுரை ரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து சாமியார் பட்டி விலக்குரோடு அருகில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் மாணவ-மாணவிகளை சந்தித்து அவர்களை பாதுகாப்பாக வாகனங்களில் செல்லும்படி தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ஊர்வலத்தை கைவிட்டு வாகனங்களில் ஏறிச் சென்றனர்.