போச்சம்பள்ளி அருகே அரியக்கா பெரியக்கா சாமி கோவில் திருவிழா ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
போச்சம்பள்ளி அருகே அரியக்கா, பெரியக்கா சாமி கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே அரியக்கா, பெரியக்கா சாமி கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அரியக்கா, பெரியக்கா கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அரியக்கா, பெரியக்கா கோவில் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை.
இதையடுத்து இந்த ஆண்டு கோவில் திருவிழா மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கோவிலில் வைத்து பூஜை செய்யப்படும் சிலைகளை மத்தூர் அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்தில் இருந்து பக்தர்கள் ஒரு கூடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் கொடமாண்டப்பட்டி வாழைதோட்டம், போச்சம்பள்ளி, கரடியூர் கிராமம் வரையில் சாமி சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பேய் விரட்டும் நிகழ்ச்சி
தொடர்ந்து செல்லியம்மன் கோவிலில் உள்ள ஊஞ்சலில் சாமி சிலைகளை வைத்து தாலாட்டி பூஜைகளை செய்தனர். பின்னர் சாமி சிலைகளை மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கோவிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். திருவிழாவையொட்டி பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் நள்ளிரவில் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூசாரி சாட்டையால் பக்தர்களை அடித்து பேய்களை விரட்டினார்.
விழாவையொட்டி ராட்சத பானையில் இறைச்சி வேக வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் போச்சம்பள்ளி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.