கடையக்குடி அணைக்கட்டில் பூங்கா புனரமைப்பு பணி தீவிரம்
கடையக்குடி அணைக்கட்டில் பூங்கா புனரமைப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
அணைக்கட்டு
புதுக்கோட்டை அருகே கடையக்குடியில் அணைக்கட்டு உள்ளது. வெள்ளாற்றில் இருந்து வரும் தண்ணீர் இதில் சேமித்து வைக்கப்பட்டு உபரிநீர் மதகுகள் வழியாகவும், தடுப்பணை வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் இதில் பெருக்கெடுத்து ஓடும். இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகம் வருவது உண்டு. இந்த அணைக்கட்டின் அருகே பூங்கா இருந்தது.
கஜா புயலின் போது பூங்கா சேதமடைந்தது. இதையடுத்து பூங்கா புனரமைப்பு மற்றும் புதிய வளர்ச்சி பணிகள் பொதுப்பணித்துறையினரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணைக்கட்டுக்கு முன்னதாக சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. மேலும் பூங்காவில் வாகனங்கள் நிறுத்தும் இ்டமும், பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதையும், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உபகரணங்களும் பொருத்தப்படுகிறது.
இதில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. பூங்கா புனரமைப்பு தீவிரமாக நடந்து வருகிற நிலையில் பணிகள் முடிவடைந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
போதுமான தண்ணீர்
கடையக்குடி அணைக்கட்டில் தண்ணீர் பரந்து விரிந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டில் பெய்த வடகிழக்கு பருவ மழையினால் வெள்ளாற்றில் தண்ணீர் அதிகம் பாய்ந்தோடியது குறிப்பிடத்தக்கது. உபரிநீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. தற்போது மழை இல்லாததால் தண்ணீர் வரத்து இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டில் பெய்த மழையினால் அணைக்கட்டில் போதுமான தண்ணீர் உள்ளது.