வருவாய் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?
வடபாதிமங்கலத்தில் வருவாய் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
வடபாதிமங்கலத்தில் வருவாய் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருவாய் அலுவலர் கட்டிடம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் அருகில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் அலுவலர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ்கள் மற்றும் அரசு உதவி திட்டங்கள் போன்றவற்றை பெற்று வந்தனர்.
வாடகை கட்டிடத்தில்
இந்த நிலையில் நாளடைவில் வருவாய் அலுவலர் அலுவலக கட்டிடம் பழுதடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. கட்டிடம் செயல்படாமல் உள்ளதால் தற்போது அந்தபகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் வருவாய் அலுவலர் அலுவலக பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய கட்டிடம் வேண்டும்
கட்டிடம் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த வருவாய் அலுவலர் அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராமக்கள் எதிர்பார்க்கின்றனர்.