வலங்கைமான் மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா
வலங்கைமான் மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வலங்கைமான்:
வலங்கைமான் மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாடைக்காவடி திருவிழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பாடைக்காவடி திருவிழா தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தநிலையில் நேற்று புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.
புஷ்ப பல்லக்கில் வீதி உலா
இதையொட்டி கோவிலில் மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பால்குடம், தொட்டில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 10 மணி அளவில் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பஸ்கள்
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன், தலைமை அர்ச்சகர் செல்வம் ஆகியோர் செய்து இருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவாரூர், தஞ்சை, கும்பகோணம், அரியலூர், மன்னார்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.