சின்ன வெங்காயம் கிலோ ரூ.5-க்கு கொள்முதல்; விவசாயிகள் கவலை
சின்ன வெங்காயம் கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.;
பெரம்பலூர்,
உற்பத்தியில் முதலிடம்
சமையலில் முக்கிய இடமாக சின்ன வெங்காயம் பங்கு வகிக்கிறது. அந்த சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தியில் தமிழகத்தில் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பருவமழை கை கொடுத்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது.
நோய் தாக்குதல், விதை வெங்காயம் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மருந்து, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்தும் சின்ன வெங்காயம் நல்ல விளைச்சலாகி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
கிலோ ரூ.5-க்கு கொள்முதல்
ஆனால் விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ சின்ன வெங்காயத்தை ரூ.5-க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை வயலில் பட்டறையில் போட்டு சேமித்து வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சந்தையில் கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோம். தற்போது விலை வீழ்ச்சியால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு வாங்கிய கடன் தொகைக்கு வட்டி கூட செலுத்த முடியாமல் சில விவசாயிகள் விளை நிலங்களை கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய சுமார் ரூ.60 ஆயிரம் செலவாகிறது.
ரேஷன் கடையில் விற்பனை செய்ய கோரிக்கை
விவசாயிகள் பட்டறை கட்டி சின்ன வெங்காயத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்தாலும், அது 3 மாதம் வரை தான் தாக்கு பிடிக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்தாலும், சின்ன வெங்காயத்தின் எடை குறைந்து விற்கும் போது லாபம் கிடைக்காது. சின்ன வெங்காயத்தை தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய முன்வந்தால் விவசாயிகள் ஓரளவு பாதிக்கப்படமாட்டார்கள். மேலும் சின்ன வெங்காயத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.