ஜோலார்பேட்டை அருகே பா.ம.க. பெண் நிர்வாகி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
ஜோலார்பேட்டை அருகே பா.ம.க. பெண் நிர்வாகி வீட்டில் 5 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி நிர்மலாராஜா (வயது 57). இவர் பா.ம.க.வில் மாநில மகளிரணி செயலாளராக உள்ளார். இந்தநிலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றி பையில் வைத்து அதை மேசையின் மீது வைத்துவிட்டு தூங்க சென்று உள்ளார்.
மேலும் காம்பவுண்ட் கேட்டை பூட்டிவிட்டு, வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது நகையை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நிர்மலா ராஜா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.