‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை அருகே சுத்தமல்லி விலக்கு பி.எஸ்.சாலையில் இசக்கி அம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதாக ராஜசேகர் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சுகாதாரக்கேடு
பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையின் நுழைவுவாயில் அருகில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றில் சிலர் குப்பைகளை கொட்டாமல், அதன் அருகிலேயே குப்பைகள், காய்கறி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கும், அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகள் வைத்து தினமும் குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- அருண் விக்னேஷ், பாளையங்கோட்டை.
வாறுகால் தூர்வாரப்படுமா?
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் மங்களாகுடியிருப்பு பகுதியில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால், மழை பெய்யும்போது கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாறுகாலில் உள்ள அடைப்புகளை அகற்றி தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- நேதாஜி மனோ, தச்சநல்லூர்.
சேதமடைந்த இருக்கைகள்
நெல்லை-அம்பை மெயின் ரோட்டில் கொண்டாநகரத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் இரும்பாலான இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த இருக்கைகளை அகற்றி விட்டு, புதிய இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- ஜானகிராமன், கொண்டாநகரம்.
ஆபத்தான மின்கம்பம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜ்நகர் 2-வது புதுத்தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ராகவன், சங்கரன்கோவில்.
பயணிகள் நிழற்கூடம் புதிதாக கட்டப்படுமா?
திருவேங்கடம் தாலுகா மேல அழகுநாச்சியார்புரத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரமும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிதாக பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- அயோத்தி, மேல அழகுநாச்சியார்புரம்.
மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 2, 3, 4-வது தெருக்களின் நுழைவுவாயில் பகுதிகளில் மெயின் ரோட்டின் ஓரமாக புளிய மரங்கள் உள்ளன. அங்குள்ள மின்கம்பங்களில் இருந்து செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை புளிய மரக்கிளைகள் சூழ்ந்துள்ளதால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளின் அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- திருக்குமரன், கடையம்.
குண்டும் குழியுமான சாலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமதுசாலிகாபுரத்தில் இருந்து புதுகிராமம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை அகற்றி விட்டு, புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
- நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.
ஆபத்தான கட்டிடம் அகற்றப்படுமா?
ஏரல் தாலுகா கொற்கை அருகே அக்காசாலை அம்மன் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பயன்பாடற்று உள்ளது. இதனால் எந்த நேரமும் அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான அந்த கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
- முருகப்பெருமாள், அக்காசாலை.