காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை வெண்ணந்தூர் அருகே பரிதாபம்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை வெண்ணந்தூர் அருகே பரிதாபம்
வெண்ணந்தூர்:
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண் பிணம்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிவலசு பகுதியில் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த பகுதி வழியாக நேற்று மாலை சென்ற பொதுமக்கள் கிணற்றில் இளம்பெண் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி இளம்பெண்ணின் உடலை மீட்டு ேமலே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது நடுப்பட்டி ஊராட்சி நரிக்கல் காடு பகுதியை சேர்ந்த ராஜி மகள் அஞ்சலை (வயது 19) என்பது தெரியவந்தது.
காதலுக்கு எதிர்ப்பு
இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர். பின்னர் மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து அஞ்சலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் அஞ்சலை பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனமுடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.