கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறலாம்
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறலாம் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,362 மனுக்கள் பெறப்பட்டு 1,148 இனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 154 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.5.2022-ந் தேதிக்குள்) மனுக்களை சமர்ப்ப்பிக்க வேண்டும், 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்களை சமர்ப்ப்பிக்க வேண்டும், சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
பரிசீலனை
மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர், மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேற்கண்ட தகவல் கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.