கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் அரசு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் அரசு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து இறப்பை உறுதி செய்வதற்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1129 மனுக்கள் பெறப்பட்டு, 906 பேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 86 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
விண்ணப்பிக்கலாம்
இந்த நிலையில் உச்சநீதி மன்றம் 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 18.05.2022 தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும், 20.03.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க முடியாதவர்கள், அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை ஒவ்வொறு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரீசிலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே, கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.