விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் மவுனம் காப்பது ஏன்; பா.ஜனதாவுக்கு குமாரசாமி கேள்வி

விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் மவுனம் காப்பது ஏன் என பா.ஜனதாவுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-04-03 15:49 GMT
பெங்களூரு:

 முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

விவசாய கடன் தள்ளுபடி

  இடியை போல் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தான். கடந்த 13 நாட்களில் பெட்ரோல் விலை 8 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று (நேற்று) மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 88 பைசாவும், டீசல் 78 பைசாவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.99-ம், டீசல் ரூ.92.83-ம் உயர்ந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாய கடன் தள்ளுபடிக்காக பெட்ரோல் லிட்டர் ரூ.1.12-ம், டீசல் ரூ.1.14-ம் உயர்த்தப்பட்டது.

  இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குதித்தனர். இந்த விலை உயர்வு பணம் விவாயிகளுக்கு சென்றுவிடும் என்று கருதி அவர்களின் வயிறு எரிந்தது. விலைவாசி உயர்வால் ஏழை மக்களின் வயிறு எரிந்தால் பா.ஜனதாவினருக்கு மகிழ்ச்சியா?. வீதிக்கு வந்து போராடுங்கள். மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புங்கள்.

நிறைவேற சாத்தியமில்லை

  சிமெண்டு, இரும்பு, உணவு தானியங்கள் உள்பட சாமானிய மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் விலையும் உயர்ந்துவிட்டது. சாமானிய மக்கள் வீடு கட்டும் கனவு நிறைவேற சாத்தியமில்லை. பா.ஜனதாவின் ஆட்சியால் சிலர் உலகின் முதல் பணக்காரர்களாக உயர்ந்து வருகிறார்கள்.

  ஹிஜாப், காவி துண்டு, திப்பு சுல்தான் குறித்த பாடம், முஸ்லிம் வணிகர்களுக்கு தடை, ஹலால் இறைச்சிக்கு எதிராக கூக்குரல் எழுப்பும் செல்வந்தர்களின் கட்சி பா.ஜனதா விலைவாசி உயர்வுக்கு மட்டும் பேசாமல் மவுனம் காப்பது ஏன்?. விலைவாசி உயர்வால் மக்கள் அதிருப்தி ஏற்பட்டு பா.ஜனதாவுக்கு எதிராக போராடி விடுவார்கள் என்று கருதி, அவர்களை திசை திருப்பும் வகையில் உணர்வு பூர்வமான விஷயங்களை பா.ஜனதாவினர் ஏற்படுத்தி வருகிறார்கள்.

பா.ஜனதா தாக்குகிறது

  விலைவாசி உயர்வுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் காரணம் என்று முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக அவா்கள் செய்த தவறுகளை பா.ஜனதா ஏன் சரிசெய்யவில்லை. சமையல் அறைகளில் தாய்மார்கள் தீயில் வெந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இன்னும் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். விலைவாசி உயர்வு என்ற சூலத்தால் ஏழை மக்களை பா.ஜனதா தாக்குகிறது.
  இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்