சென்னையை சேர்ந்த ரவுடிகள் உள்பட 4 பேர் கைது

வேளாங்கண்ணியில் லாட்ஜில் பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-03 15:38 GMT
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணியில் லாட்ஜில் பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
கொலை வழக்கு
சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது20) என்பவர் தனது நண்பர்களுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக  சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதைத்தொடர்ந்து  சென்னை தனிப்படை போலீசார் நேற்று நாகைக்கு வந்து, இதுதொடர்பாக நாகை தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 பேர் கைது
பின்னர் நாகை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சென்னை போலீசார் வேளாங்கண்ணியில் உள்ள லாட்ஜிகளில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னை செனாய் நகரை சேர்ந்த தேவசகாயம் (36), விக்னேஷ் நண்பர்களான சென்னை திருவேற்காடு பால்வீதி தெருவை சேர்ந்த எழிலரசன் (24), திருவண்ணாமலை மாவட்டம் கீழபென்னாத்தூர் பகுதியை சேர்ந்த தினகரன் (27) என்பது தெரிய வந்தது.  
பல்வேறு வழக்குகள்
 விக்னேஷ் மீது சென்னை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதும், இவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும், தேவசகாயம் மீது சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவரது பெயரும் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரிய வந்தது.  இவர்கள் எதற்காக வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்