போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி காலவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், செல்போன் பேசிக் கொண்டும், மது அருந்திக் கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது. சிக்னல்களை கவனித்து சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். அதிக வேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நில அபகரிப்பு டி.எஸ்.பி. கந்தன், முதன்மை அதிகாரி உமா மகேஸ்வரி, உதவி அதிகாரிகள் அசோக், கமலக்கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.