தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூா் மாவட்டங்களில் குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
மாற்று பாதை அமைக்கப்பட்டது
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவை அடுத்த பிராந்தியங்கரை வழியாக திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் செல்லும் இணைப்பு சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் கட்டும் பணி நிறைவடையும் வரை தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தனர்.
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் அசேஷம் பகுதியில் ஜோதிநகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், ஜோதிநகர்.