ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்.
வேலூர்
வேலூர் கோட்டை அருங்காட்சியகம் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட தேச தலைவர்கள் என்ற தலைப்பில் மாணவர்கள் ஓவியம் வரைந்தனர். இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஒரு பிரிவாகவும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒருபிரிவாகவும் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 324 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் ஓவியப்போட்டியில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 6 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அருங்காட்சியகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் கலந்து கொண்டு 6 மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மாணவ-மாணவிகள் வரைந்த சிறந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.