கள்ள நோட்டுகள் அச்சடிக்க எந்திரங்களை தயார் செய்த ஊட்டி உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் வகையில் பிரின்டிங் எந்திரங்களை தயார் செய்த ஊட்டி உரிமையாளர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-03 13:14 GMT
ஊட்டி

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் வகையில் பிரின்டிங் எந்திரங்களை தயார் செய்த ஊட்டி உரிமையாளர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ள நோட்டுகள்

புதுச்சேரி மாநிலத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த மேலும் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த அச்சக உரிமையாளர் தாமஸ் (வயது 39) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பிரின்டிங் எந்திரங்களில் சில மாற்றங்களை செய்து வடிவமைத்து கொடுத்தது தெரியவந்தது. சமீபத்தில் புதுச்சேரி போலீசார் ஊட்டிக்கு வந்து தாமசை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த விசாரணையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஊட்டி அச்சக உரிமையாளர் தாமஸ் நண்பராக இருந்ததும், அனைவரும் கூட்டு சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. தாமஸ் புதிதாக பிரிண்டிங் எந்திரங்களை வாங்கி சில மாற்றங்களை செய்து கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் வகையில் வண்ண கரைசல்களை உள்ளீடு செய்து உள்ளார். இதனை சரிசெய்து பார்த்த பின்னரே அந்த கும்பலுக்கு வழங்கி உள்ளார்.

பணம் சம்பாதிக்க...

பின்னர் நாகூர் மீரான், ரகு இருவரும் சென்னையில் ரகசிய அறையில் கணினி மூலம் பிரிண்டிங் எந்திரத்தை இணைத்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு உள்ளனர். தாமஸ் ஊட்டியில் தொழில் செய்வது போல் இருந்தாலும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்களை தயார் செய்து கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. 8-ம் வகுப்பு வரை படித்த அவர் தந்தை தொடங்கிய தொழிலை நடத்தி வந்தார். மேலும் கடந்த 2001-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட தாமசை ஊட்டி போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 5 எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊட்டியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதா, வேறு யாரேனும் அவரிடம் இருந்து எந்திரங்களை வாங்கி உள்ளார்களா என்று ஊட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்