மா சாகுபடியில் விளைச்சல் குறைந்தது

மா சாகுபடியில் விளைச்சல் குறைந்தது;

Update: 2022-04-03 13:11 GMT
பருவநிலை மாற்றத்தால் மாமர சாகுபடியில் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மாம்பழம்
முக்கனிகளில் முதன்மையானதும், நறுமணத்திலும் திகழ்வது மாம்பழம். சர்க்கரை, புரதம், ஏ.பி.சி உள்ளிட்ட உயிர் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் செம்மண் பாங்கான நிலத்தில் வெப்பமண்டலப் பயிராக சாகுபடி செய்யப்படும் மாம்பழம் இமாம்பசந்த், அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, பெங்களூரா, நீலம் என பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. 
கோடைகால விருப்ப உணவான மா தள்ளுவண்டி, சில்லறை விற்பனை மற்றும் சாலையோர கடைகளில் விற்பனைக்கு வரும். நவம்பர் மாத இறுதியில் இருந்து ஜனவரி மாத இறுதிக்குள் பூப்பூத்து பலன் தருவதற்கு தயாராகிவிடும்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
பலன் தரக்கூடியது
முதன் முதலாக பூ பூத்து காய்த்து கனியாகி சந்தைக்கு வருவது செந்தூரா மாம்பழம். கடைசியில் பூ பூத்து சந்தைக்கு வருவது நீலா மாம்பழம். இது சந்தைக்கு வந்தால் மாம்பழ சீசன் முடிந்து விடும். இடைப்பட்ட காலத்தில் மற்ற வகைகள் பூத்து பலனளிக்க தயாராகி விடுகின்றன. ஆனால் பூக்கள் அனைத்தும் காயாக மாறுவதில்லை. கிளைகள் தாங்கும் அளவில் மட்டுமே காய்கள் பிடித்து பழமாகும். 
சுமார் 100 ஆண்டுகள் நீண்ட கால பயிராக நிலைத்து நின்று பலன் தரக்கூடிய மா ஜூலை முதல் டிசம்பர் இடைப்பட்ட காலத்தில் நடவு செய்யப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் வேண்டாத கிளைகளை வெட்டி பக்குவப்படுத்த வேண்டும். அத்துடன் மூன்று வருடத்திற்குப் பிறகு காய்க்கும் திறனுக்கு கொண்டு வந்து மரத்தைச் சுற்றிலும் சூரியஒளி படும் வகையில் கிளைகளை வெட்டி கவாத்து செய்ய வேண்டும்.
விவசாயிகள் வேதனை
அத்துடன் நீர் மேலாண்மை மற்றும் பராமரிப்பை முழுமையாக மேற்கொண்டால் கூடுதல் விளைச்சலை அடையலாம். மா சாகுபடியில் பூ மற்றும் பிஞ்சு உதிர்தல், நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் புழு தாக்குதலால் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பூ பிஞ்சாக மாறி காயாக முற்றுவதற்குள் உதிர்ந்து விட்டது. 
இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மா சாகுபடியில் லாபம் ஈட்ட முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் மொத்த உழைப்பும் வீணாகி உள்ளதால் வேதனை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்