ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 3-ந் தேதி வரை வேலூரில் பாலாறு பெருவிழா. சக்தி அம்மா தகவல்
வேலூரில் வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 3-ந் தேதி வரை 5 நாட்கள் பாலாறு பெருவிழா நடைபெற உள்ளது என்று சக்தி அம்மா கூறினார்.
வேலூர்
வேலூரில் வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 3-ந் தேதி வரை 5 நாட்கள் பாலாறு பெருவிழா நடைபெற உள்ளது என்று சக்தி அம்மா கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மண்டபத்தில் நடந்தது. கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அகில பாரதீய சன்னியாசிகள் சங்க பொதுச்செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி, பொருளாளர் வேதாந்த ஆனந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு சக்தி அம்மா தலைமை தாங்கி புதிதாக வடிவமைக்கப்பட்ட பாலாறு அன்னை சிலையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கோவில் என்ற வார்த்தையை ஆயிரம் ஆண்டுகளாக அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். கோ என்றால் மிகப்பெரியவன். வில் என்றால் வீடு. கோவில் என்பதற்கு மிகப்பெரிய வீடு என்று அர்த்தம். மனிதனாக பிறந்த அனைவருக்கும் வீடு உள்ளது. ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்ப வீட்டின் அளவு மாறும். உலகம் முழுவதும் கடவுள் நிறைந்து இருக்கிறார். தெய்வம் இருக்கும் இடத்தை தான் கோவில் என்று அழைக்கிறோம். கடவுள் எங்கும் நிறைந்து, இறைந்து இருக்கிறார். எனவே அவரை இறைவன் என்றும் அழைக்கிறோம்.
பாலாறு அன்னைக்கு சிலை
கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். பின்னர் ஏன் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசனம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். கோவிலில் தினமும் சாமிக்கு செய்யப்படும் பூஜை மற்றும் கூறும் மந்திரங்களால் அதிகமாக சக்தி உள்ளது. மற்ற இடங்களில் அதனை உணர முடியாது. கோவிலில் கடவுளின் சக்தியை முழுமையாக உணர முடியும். நதிகள், இயற்கையை நாம் தெய்வமாக பார்க்க வேண்டும். அதனை விஞ்ஞான ரீதியாக தொடர்புப்படுத்த கூடாது. இயற்கையை நாம் நேசித்தால் நம்மை இயற்கை நேசிக்கும். நதிகளை தெய்வமாக பார்த்தால் அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அசுத்தம் செய்யக்கூடாது என்ற எண்ணம் வரும்.
பாலாறு அன்னைக்கு உருவம் கிடையாது. தற்போது அதற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாலாற்று அன்னையின் பெருமையை போற்றும் வகையில் பாலாற்றங்கரையில் கோவில் கட்டி பாலாற்று அன்னை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அங்கு தினமும் பூஜைகள் நடைபெறும். பாலாற்றின் பெருமை, நதிகளின் அருமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கர்நாடக மாநிலம் நந்தி மலையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் வரை 300 கிலோமீட்டர் வரை சன்னியாசிகள் மேமாதம் ஊர்வலம் நடத்த உள்ளனர்.
பாலாறு பெருவிழா
வருகிற ஜூன் மாதம் 29-ந் தேதி முதல் ஜூலை மாதம் 3-ந் தேதி வரை 5 நாட்கள் வேலூரில் பாலாறு பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி 5 நாட்கள் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை பாலாறு அன்னைக்கு, பாலாறு நதியின் புனிதநீர் கலசங்களுக்கு வேள்வி வழிபாடும், 10 மணி முதல் இரவு 8 மணிவரை ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், ஸ்ரீபுரம் நாராயணிமகால், நாராயணி பீடத்தில் நடைபெறும். மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை பாலாற்றங்கரையில் பாலாறு அன்னைக்கு, புனித நதியில் மகா ஆரத்தி நடைபெறும்.
இவ்வாறு சக்தி அம்மா கூறினார்.
கூட்டத்தில், ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ், நாராயணிபீட மேலாளர் சம்பத், இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.